Saturday, October 24, 2009

இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...

மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாக தமிழ் நாடே கொதித்து போயிருந்தது. 

அது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட கண்டன ஊர்வலம். யாரோ ஒரு காலி கல் விட்டெறிய அப்படியே பெரிதாகி ஒரு மாணவரின் உயிரை பலிகொண்டிருந்தது. அதன் பின்னணியில் ஒருவாரம் நடந்த நிகழ்வுகள் இதோ கீழே.

அரசுக்கு எதிரான செய்திச் சேனல்கள் மட்டும் போராட்டங்களை திரும்பத் திரும்ப காட்டிகொண்டிருந்தது.

தமிழ்நாட்டின் எல்லா கல்லூரிகளும் ஒரு நாள் விடுமுறை அறிவித்தது அரசு. சில கல்லூரிகள் ஒருவாரமும், சில மறு அறிவிப்பு வரும்வரை மூடியும் போராட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து அறிவித்தன.

இறந்த மாணவரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் மாநில அரசு அறிவித்தது. டிவியில் எல்லா நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் ஒளிபரப்பாயின.

பத்திரிகைகள் முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் பேட்டி, நண்பர்களின் பேட்டி என பிரசுரித்தன.

அரசியல் தலைவர்கள் அவர்களின் சார்புடைய சேனல்களில் அவர்களுக்கு பிடித்தமான நடன நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்து அவ்வப்போது ஆறுதல் கடிதங்களையும் அறிக்கைகளையும் எழுதிக்கொண்டிருந்தனர்.

அரசால் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா திட்டமிட்டபடி இனிதே நடந்தது, நேரடி ஒளிபரப்புடன்.

மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு எதிக்கட்சித் தலைவரைப்பற்றி ஆளுங்கட்சி தலைவர் வெளியிட்ட காட்டமான அறிக்கையினால் ஒருவர் தீக்குளிக்க, ஊடகங்கள் யாவும் அதில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்தன.

அரசியல்வாதிகள் எதிர்போராட்டம், கண்டன ஊர்வலம் என மும்மரமானார்கள். மக்களும், புது வரவால் அந்த மாணவனின் சாவு, ஈழப்பிரச்சினை என யாவும் மறந்து புதியதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.

தமிழக அமைச்சர்கள் குழு, சால்வைகளுடனும், வாய் நிறைய பொய்யுடனும் முகம் நிறைய சிரிப்புடனும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்.

பிடிச்சிருந்தா கருத்தையும், நிறைய பேரை சேர ஓட்டையும் போடுங்களேன்...